×

திருநெடுந்தாண்டகத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று இரவு வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்: நாளை முதல் பகல் பத்து ஆரம்பம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்றிரவு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. இன்றிரவு (3ம் தேதி) 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது.

இரவு 9 முதல் 9.30 மணி வரை அமுது செய்தலும், 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனம், 10.30 முதல் 11 மணி வரை திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பலங்காரம், 11.30 வரை தீர்த்த கோஷ்டி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. நாளை பகல்பத்து திருமொழி திருநாள் தொடங்குகிறது. காலை 7.30 மணிக்கு முத்தங்கி சேவையில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் புறப்பாடு நடக்கிறது. 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் அடைகிறார்.

காலை 9 மணி முதல் 1 மணிவரையும், மாலை 4 முதல் 5.30 மணிவரையும் பொதுஜன சேவையுடன் அரையர் சேவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். தொடர்ந்து பகல்பத்து 10 நாட்களும் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் காட்சி அளிப்பார். பகல் பத்து உற்சவத்தையொட்டி இரவு 8.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 13ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. 20ம் தேதி திருக்கைத்தல சேவையும், 21ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் நடைபெறும்.  23ம் தேதி தீர்த்தவாரி,  24ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உள் மணல்வெளியில் பக்தர்கள் வசதிக்காக தகரபந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகையில் விழா
அமாவாசை, பவுர்ணமி துவங்கியதில் இருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப்படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். இதில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாக கூறி நம்பெருமாள் அருளியதாக ஐதீகங்கள் கூறுகின்றன.

அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தது. இதை எப்படி  கொண்டாடுவது என கேள்வி வந்த போது, அப்போது  மணவாள மாமுனிகள் சொன்னபடி வைகுண்டஏகாதசி திருவிழா கார்த்திகையில் வந்தது. அதேபோல் 19 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.


Tags : Vaikuṇṭha Ekadashi Festival ,Srirangam Temple ,Thiruvanthagam , Vaikunda Ekadasi Festival begins tonight at Srirangam Temple
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...